மலேசியாவிலுள்ள 10 சிறந்த கடற்கரைகள்
மலேசியா, மேற்கில் தீபகற்பமும் கிழக்கில் போர்னீயோ தீவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. கடல் சூழ்ந்திருக்கும் மலேசிய நாட்டில் இயற்கையாகவே உலகின் மிகச் சிறந்த கடற்கரைகள் உள்ளன. வருடம் முழுதும் வெப்ப மண்டல வானிலை கொண்டுள்ள மலேசியா, சுற்றுலா ஆசை கொண்ட பயணிகளுக்கும் சூரியன், மணல் மற்றும் கடல் ஆகியவற்றைக் கண்டுகளிக்க விரும்பும் சுற்றுப்பயணிகளுக்கும் மிகவும் பொறுத்தமான இடமாகும்.
நான் வடக்கு மலேசியாவிலுள்ள பினாங்கு எனும் ஒரு தீவில், எட்டும் தூரம் வரை கடல் தெரியும் சூழலில் வளர்ந்தேன். என் வளரும் பருவத்தில் , கடற்கரைக்குச் சென்று குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் மகிழ்வாய் இருப்பதுதான் வார இறுதி நாட்களின் நடவடிக்கையாகும். கோலாலம்பூருக்கு மாற்றலாகி வந்தபின்புதான் அந்த வசதி எனக்கு இனி கிட்டப் போவதில்லை என்பதனை உணர்ந்தேன்.
இங்கே நான், நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய மலேசியாவிலுள்ள 10 சிறந்த கடற்கரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளேன். ஒவ்வொரு இடமும் நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருப்பதோடு அவை தனக்கே உரிய தனித்துவத்துடனும் திகழ்கின்றன.
நிச்சயமாக, நான் பாரபட்சத்துடன் பினாங்கை மலேசியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக குறிப்பிட்டிருக்கின்றேன்! படித்து மகிழ்வதோடு உங்களின் எதிர்கால மலேசிய கடற்கரை சுற்றுலாவிற்கு உதவும் என பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.
திசெம் ரின்போச்சே மற்றும் வில்லியம்
1.பங்கோர் தீவு மற்றும் பங்கோர் லாவூட்
பங்கோர் தீவு தீபகற்ப மலேசியாவிலுள்ள பேராக் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்த அழகான தீவுடன் இதர 8 தீவுகள் இணைந்து தீவுக்கூட்டம் அமைந்துள்ளது. இதில் இரண்டு தீவுகளான பங்கோர் மற்றும் பங்கோர் லாவூட்டில் குடியிருப்பு இருக்கின்றது.
பங்கோர் தீவிற்கு ஆகாயமார்க்கமாக கோலாலம்பூரிலிருந்தும் அல்லது லுமுட் வழி படகிலும் போகலாம். பங்கோர் தீவிலுள்ள கடற்கரைகள் தெலுக் நிப்பா, கோரல் பெய், தெலுக் பேலங்கா மற்றும் பாசீர் போகாக் ஆகியவை ஆகும். அனைத்தும் அழகான மணல் கடற்கரைகளாகும். கடற்கரைகளின் முக்கிய நடவடிக்கைள், ஜெட் சறுக்கு, பானானா படகு பயணங்கள் மற்றும் கேநோவிங்க் ஆகியவை ஆகும். நீங்கள் தீவினைச் சுற்றிப்பார்க்க ஒரு நாள் செலவிடலாம். நீங்கள் சுற்றிப்பார்க்க வேன்டிய இடங்கள், புலி பாறை கொண்ட டச்சு கோட்டை, ஃபோ லின் காங் கோவில் மற்றும் மீனவர் கிராமங்கள். அதோடு, நீங்கள் உள்ளூர் பொருட்களான நெத்திலி மற்றும் இதர மீன் பொருட்களையும் வாங்கலாம்.
பங்கோர் லாவூட் ஆடம்பரமான உல்லாச விடுதிகள் கொண்ட தனியாருக்கு சொந்தமான தீவு. பங்கோர் தீவிலிருந்து வெறும் 10 நிமிட படகு பயணத்தில் அடைந்து விடலாம். அங்கே இருக்கும் மிகவும் பிரபலமான கடற்கரை, அசல் மரகத நிறத்திலான கடல் நீர் கொண்ட எமரால்டு பே. நீங்கள் கடற்கரையில் சூரிய சாய்வு நாற்கலிகளில் அமர்ந்திருக்கலாம் அல்லது கடலில் நீந்தி மகிழலாம். நீங்கள் வாடகை படகினில் கடலுக்குச் சென்று உங்களின் நாளை மகிழ்வுடன் களிக்கலாம்.
2. லங்காவி தீவு
லங்காவி தீவு ஆகாயமார்க்கமாக உள்ளூரிலிருந்து அல்லது வெளியூரிலிருந்து சென்றடைய மிகவும் சுலபமான இடமாகும். மாற்றாக, நீங்கள் பினாங்கிலிருந்து அல்லது குவாலா பெர்லிஸிலிருந்து ஃபெர்ரி எடுத்து லங்காவிற்குச் செல்லலாம்.
லங்காவி 100-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டு ஒரு தீவுக்கூட்டம் அமைத்துள்ளது. பல வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் கொண்டிருப்பதால் அதற்கு, ‘உலக கியோபார்க்’ என்ற அந்தஸ்து யுனெஸ்கோவினால் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை பாறைகளின் உருவாக்கமும் லங்காவியைத் தனித்துவமாகக் காட்டுகின்றது.
லங்காவியிலுள்ள பந்தாய் சேனாங் மிகவும் பிரபலமான கடற்கரை மற்றும் அது எப்பொழுதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளால் நிரம்பி இருக்கும். லங்காவியைச் சுற்றிப்பார்க்க உச்ச பருவம் டிசம்பரிலிருந்து ஜனவரி ஆகும். ஜெட் சறுக்கு, பாய் படகோட்டம் மற்றும் பனானா படகு பயணம் போன்ற பல விதமான தண்ணீர் விளையாட்டுக்களால் கடற்கரை கோலாகலமாக இருக்கும். உங்களுக்கு அமைதியாக இயற்கையை ரசித்த வண்ணம் நேரத்தை செலவிட வேண்டுமெனில், நீங்கள் படகொன்றை வாடகை எடுத்து தீவைச் சுற்றியோ அல்லது ஜீயோபார்க் சுற்றியோ வலம் வரலாம்.
லங்காவியில் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால், அது பொருட்கள் வாங்குபவர்களின் புகலிடமாக திகழ்கின்றது. அனைத்து பொருட்களுக்கும் வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் வான் பாலத்திலோ அல்லது கேபள் வாகனத்தின் மூலமாகவோ லங்காவியின் உச்சிக்குச் சென்று மனதைக் கொள்ளை கொள்ளும் இயற்கையின் காட்சிகளைக் காணலாம்.
அங்கே சுற்றுப்பயணிகளுக்காக நிறைய தங்கும் வசதிகள் உண்டு. தே ஃபொர் சீசன்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர விடுதிகள் முதல் கடற்கரை தங்கும் விடுதிகள் வரை உண்டு. லங்காவி, குடும்பங்கள் மற்றும் சாகசப்பயணிகள் அனைவருக்கும் உகந்த சுற்றுலா தளமாகும்.
3. தியோமான் தீவு
தியோமான் தீவு, கிழக்கில் இருக்கும் பகாங் மாநிலத்தின் கடல் பகுதியில் இருப்பதோடு அது தியோமான் பூங்கா மற்றும் பாதுகாக்கப்படும் இயற்கையின் ஒரு பகுதியாகும். இத்தீவு வரி விலக்கு நிலை கொண்டுள்ளதால் வருகையாளர்களின் ஷாப்பிங் சொர்க்கமாக விளங்குகின்றது. ஷாப்பிங்கை தவிர்த்து, உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று தியோமானில் இருப்பதாகக் கருதப்படுகின்றது – ஜூவாரா கடற்கரை, வெள்ளை மணல் கடற்கரைகளுக்கும் பளிங்கு போல் கடல் நீருக்கும் புகழ் பெற்றது. சாலாங் கடற்கரை இரண்டாவது மிகப் பிரபலமான கடற்கரையாகும்.
வருகையாளர்கள் ஸ்நோர்க்கிலிங், டைவிங் மற்றும் ஆங்கிளிங் போன்ற பல விதமான நடவடிக்கைகளை முயற்சி செய்யலாம். ஆகஸ்ட் மாதத்தில் தீவின் நீர் சூட்டில் விலங்கினங்கள் நிறைய இருக்கும் என்பதால் அம்மாதம் வருகையாளர்களுக்கு மிகவும் உகந்த மாதமாகும். அல்லது, வருகையாளர்கள் மழைக்காடுகளுக்கு இயற்கை நடை போகலாம். அங்கே பாதுகாக்கப்படும் தேவாங்கு, சுட்டி மான் மற்றும் முள்ளம்பன்றி போன்ற பல விலங்கினங்களை அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் பார்க்கக் கூடும்.
நீங்கள் கோல்ப் பிரியர் என்றால், தீவினில் இருக்கும் இரண்டு கோல்ப் திடல்கள் ஒன்றில் விளையாடலாம்.
தியோமான் தீவினைச் சுற்றிப் பார்க்க மிகச் சிறந்த காலம் மே மாதம் மற்றும் ஜூலை மாதம் ஆகும். தவிர்க்க வேண்டிய காலம் ஆண்டின் இறுதியாகும், ஏனெனில், பருவ மழைக்காலம் என்பதோடு அலைகள் மிக உயரமாகவும் ஆபத்தாகவும் இருக்கும்.
4. ரேடாங் தீவு
ரேடாங் தீவு, திரெங்கானு மாநிலத்தில் இருக்கும் கடல் பூங்காவான ரேடாங் தீவுக்கூட்டத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற தீவாகும் இந்த தீவு குவாலா திரங்கானுவிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. நீங்கள் மேராங் ஜெட்டியிலிருந்து மிகப்பெரிய தீவான பாசீர் பஞ்சாங் அடைய 40 நிமிட படகு பயணம் மேற்கொள்ள வேண்டும்.
ரேடாங் தீவில் முதன்மை நடவடிக்கை ஸ்நோர்க்கெலிங். இதற்குக் காரணம் கடல் நீர் மிகவும் அமைதியாக இருப்பதுடன் அதிகமான பவள கடல்நீரடிப்பாறைகளும் உள்ளன. நிறைய உல்லாச விடுதிகள் ஸ்நோர்க்கெலிங் பேகேஜ்கள் வழங்குகின்றன. மற்றுமொரு பிரசித்திப் பெற்ற நடவடிக்கை ஸ்குபா டைவிங் ஆகும். நீர் மிகவும் தெளிவாக இருப்பதால், உங்களால் பச்சை ஆமைகளையும் பாறை சுறாக்களையும் நீர் முழ்குகையில் காண முடியும். கடல்நீரடிப்பாறைகளைப் பாதுகாக்க மோட்டார் கடல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அப்படி உங்களுக்கு டைவிங்கிலிருந்து ஓய்வு வேண்டுமெனில், நீங்கள் கயாக்கிங் அல்லது கடற்கரை கைப்பந்து விளையாடலாம்.
ரேடாங் தீவை பருவ மழைக்காலமான நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை தவிர்க்கவும். இக்கால கட்டத்தில் பெரும்பாலான உல்லாச விடுதிகள் மூடியிருப்பதோடு தீவிற்கான போக்குவரத்தும் கட்டுப்படுத்தப்படும். அங்கே பேக்பெக்கர் தங்கும் வசதி இல்லையென்பதோடு, பெரும்பாலான ஆடம்பர மற்றும் நடுத்தர உல்லாச விடுதிகள் பாசிர் பஞ்சாங்கில் அமைந்துள்ளன.
5. பெர்ஹெந்தியான் தீவு
பெர்ஹெந்தியான் தீவு, மலேசியாவின் கிழக்குக் கடற்கரையில் திரங்கானு மாநிலத்தின் கரையோரத்தில் அமைந்துள்ளது. பெர்ஹெந்தியான் பெசார் (பெரிய தீவு) மற்றும் பெர்ஹெந்தியான் கெச்சில் (சிறு தீவு) என்ற இரண்டு முக்கியமான தீவுகள் இருக்கின்றன. இரண்டும் கிளந்தானில் உள்ள குவாலா பேசுட் அல்லது திரங்கானுவில் உள்ள குவாலா திராங்கானுவில் இருந்து ஒரு மணி நேர படகு பயண தூரத்தில் உள்ளது.
பெர்ஹெந்தியான் தீவு வெள்ளை நிற மணல் கடற்கரைகளால் சூழ்ந்திருப்பதோடு அதன் கடல் பாதிக்கப்படாத மற்றும் பாதுகாக்கப்படும் கடல்நீரடிப்பாறைகளால் நிறைந்திருக்கின்றது. சுற்றுப்பயணிகள் ஸ்நோர்கல் மற்றும் டைவிங் செய்து கடல்நீரடிப்பாறைகளில் இருக்கும் அருமையான கடல் உயிரினங்களைக் காணும் அனுபவத்திற்காகவும் அங்கு செல்கின்றனர்.
பெர்ஹெந்தியான் கெச்சில் உலகின் 100 சிறந்த கடற்கரைகளில் ஒன்றாக CNN-னால் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தீவுகளில் குடில்கள் மற்றும் நடுத்தர உல்லாச விடுதிகள் மட்டுமே தங்கும் வசதிகளாக உள்ளன. சுற்றிப்பார்ப்பதற்கு உகந்த காலம் மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை. பெரும்பாலான உல்லாச விடுதிகள் அக்டோபர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பருவ மழை காலத்தின் காரணமாக மூடப்படும்.
6. சரவாக், சிமிலாஜாவுவில் இருக்கும் ஆமை கடற்கரை & தங்க கடற்கரை
சிமிலாஜாவு தேசிய பூங்கா கிழக்கு மலேசியாவில் உள்ள பிந்துலு, சரவாக்கில் அமைந்திருக்கின்றது. அது பிந்துலுவின் வடகிழக்கிலிருந்து 30 கிலோமீட்டர் மற்றும் பிந்துலு பட்டணத்திலிருந்து 30 நிமிட வாடகை வண்டி பயண தூரத்தில் இருக்கின்றது. இந்த தேசிய பூங்கா 1976-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இங்கே மிகவும் பிரசித்திப் பெற்ற கடற்கரைகள், ஆமை கடற்கரை I & II மற்றும் தங்க கடற்கரை ஆகும். ஆமை கடற்கரை I & II பூங்காவின் அலுவலகத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் தங்க கடற்கரை 10 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கின்றன.
அங்கே செல்வதற்கான மிகச் சிறந்த வழி, பிந்துலு வார்ஃவிலிருந்து ஒரு விரைவு படகினை வாடகை எடுத்துச் செல்வதாகும். நீங்கள் அங்கே இருக்கும் பொழுது, கடல் நீரினில் நீச்சல் அடிக்கலாம் அல்லது ஸ்நோர்க்கெலிங் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை ஆமைகள் கடற்கரையினில் முட்டை இடுவதால், ஆமை கடற்கரை மிகவும் பிரசித்திப் பெற்றது. கடற்கரையை ரசித்து முடித்ததும், நீங்கள் மீண்டும் பூங்காவின் அலுவலகத்திற்கு நடந்து வந்து பூங்காவில் இருக்கும் தாவர விலங்கினங்களைக் கண்டு களிக்கலாம்.
அங்கே குடில்களும் விடுதிகளும் வாடகைக்கு இருக்கின்றன. சாகசங்கள் விரும்புவர்களுக்காக பார்பெக்யூ இடங்கள் போன்ற முகாம் இடும் வசதிகளும் இருக்கின்றன. இவையனைத்தையும் பூங்காவின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்ய முடியும். ஏமாற்றத்தைத் தவிர்க்க முன்பதிவு செய்யுங்கள்.
7. சிப்பாடான் தீவு
மலேசியாவில் சிப்பாடான் தீவு மட்டும்தான் முறையாக கடலினில் இருக்கின்றது. அதன் மிகப் பெரிய பல வகை கடல் உயிரினவாழ் கவனத்தை ஈர்த்துள்ளதால் அது உலகில் உள்ள சிறந்த டைவிங் இடங்களில் ஒன்றாக வாக்களிக்கப்பட்டுள்ளது. சபாவின் கரையினில் செம்போர்னா பட்டணத்தில் அமைந்திருக்கும் சிப்பாடான் தீவிற்கு 30 நிமிட விரைவு படகு பயணம் உங்களை அழைத்துச் செல்லும். செம்போர்னாவிற்குச் செல்ல, தாவாவுக்கு விமானத்தில் சென்று பின் 2 மணி நேர மோட்டார் வண்டி பயணம் செல்ல வேண்டும்.
சிப்பாடான் தீவு பாதுகாக்கப்படும் இடம். ஆதலால், இத்தீவினில் எந்தவொரு தங்கும் வசதியும் இல்லை. வருகையாளர்கள் 15 கிலோமீட்டர் தொலைவில் அருகாமையில் இருக்கும் மாபுல் அல்லது கப்பாலை தீவுகளில் அல்லது செம்போர்னா பட்டணத்தில் தங்கலாம். சிப்பாடான், தின சுற்றுப்பயணிகளுக்கு காலை 8 மணியிலிருந்து பகல் 3 மணி வரை திறந்திருப்பதோடு ஒரு நாளைக்கு 120 பேர் மட்டும் டைவிங் செய்ய கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் உங்களின் டைவிங் சுற்றுலாவை முன்பதிவு செய்யும் போது ஏற்பாட்டாளர், சிப்பாடானுக்கு உங்களின் தின அனுமதி அட்டையை ஏற்பாடு செய்வார். அங்கே கடைகளோ உணவகங்களோ இல்லாததால், ஏற்பாட்டாளர்கள் உங்களின் சுற்றுலாவிற்குத் தேவையான உணவுகளைப் பொட்டலம் செய்து கொண்டு வருவார்கள்.
சிப்பாடானுக்குச் செல்வதற்கான முக்கியக் காரணம் ஸ்குபா டைவிங் மற்றும் ஸ்நோர்க்கல் ஆகும். டைவிங் செய்பவர்கள் பவளப்பாறைகளிலிருந்து கடல் உயிரினங்கள் வரை கடல்வாழ்முறையை அனுபவிப்பார்கள். சிப்பாடானில் டைவிங் செய்வதற்கு சிறப்புக் காரணம் ஆமை கல்லறை, கடலுக்கடி குகையாகும். குகைக்குள் மாட்டிக் கொண்டு மூழ்கி இறந்த ஆமைகளின் கூடுகளை நீங்கள் காணலாம். குகைக்குள் அழைத்துச் செல்ல உங்களுக்கு டைவிங் மாஸ்டர் தேவை.
அப்படி நீங்கள் டைவிங் செய்யாதவர் என்றால், நீங்கள் அருகிலுள்ள ஆழமற்ற தீவினில் ஸ்நோர்க்கெலிங் செய்யலாம் மற்றும் உங்களால் பல வகையான கடல்நீரடிப்பாறைகள், பவளங்கள் மற்றும் மீன்களைக் காண முடியும்.
ஓர் எச்சரிக்கை : சிப்பாடான் கடந்த சில வருடங்களாக கடத்தல்காரர்களின் இலக்காக இருந்து வருகின்றது. அதனால், தயவு செய்து கவனமாக இருப்பதோடு உங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்ளுங்கள். வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மலேசிய கடற்படையினால் கடல் நீர் ரோந்து செய்யப்படுகின்றது.
8. லாங் தெங்கா
லாங் தெங்கா திரங்கானுவிற்கு அருகில் ரேடாங் மற்றும் பெர்ஹெந்தியான் தீவுகளுக்கும் மத்தியில் அமைந்திருக்கின்றது. திரங்கானுவில் உள்ள தஞ்சோங் மேராங்கிலிருந்து ஒரு விரைவு படகினை நீங்கள் உங்களின் உல்லாச விடுதியின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாம். இப்பயணம் சுமார் 40 நிமிடங்கள் எடுக்கும். லாங் தெங்கா, ரேடாங் தீவினை விட அமைதியாகவும் குறைவான வளர்ச்சியும் கொண்டது.
அங்கே விடுமுறைக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டால், நான்கு உல்லாச விடுதிகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். லாங் தெங்காவைச் சூழ்ந்திருக்கும் வெப்பமண்டல நீர் ரத்தின நிறத்தில் இருப்பதோடு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பவளங்களும் கொண்டுள்ளது. அங்கே ஸ்நோர்க்கெலிங் மற்றும் ஸ்குபா டைவிங் போன்றவற்றை மகிழலாம். அடிக்கடி பயணிகள் வருகை புரியும் இரண்டு கடற்கரைகள் பந்தாய் மட் ஹாசான் மற்றும் பந்தாய் பாசீர் ஆயிர் ஆகியவையாகும்.
அப்படி நீங்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை பயணித்தால், கடற்கரையில் பச்சை அல்லது அழுங்காமைகள் முட்டையிடுவதைக் காணலாம். பருவ மழை காரணமாக நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை தவிர்த்து விடுங்கள்.
9. ராவா தீவு
அப்படி நீங்கள் உங்களின் அன்பானவர்களுடன் அல்லது உங்களுடன் தனியாக நேரத்தைச் செலவழிக்க விரும்பினால், ராவா தீவு மிகச் சிறந்த இடமாகும். மலேசியாவில் ஜோகூர் மாநிலத்தில் அமைந்துள்ளதோடு மெர்சிங்கிலிருந்து படகு வழி சென்றடைய முடியும். படகு பயணம் 45 நிமிடங்கள் எடுக்கும்.
ராவா தீவில், நீங்கள் ஒன்று ஆடம்பர உல்லாச விடுதி அல்லது லாட்ஜ்களில் தங்க தேர்வு செய்யலாம். இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன. எதை தேர்ந்தெடுத்தாலும் உங்களால் கடற்கறையில் சூரியனையும் வெள்ளை மணலையும் அனுபவித்து மகிழ முடியும். இந்த தீவு தேன்நிலவு செல்லும் தம்பதியருக்கும் இன்பச் சுற்றுலா எதிர்பார்க்கும் தம்பதிகளுக்கும் மிகச் சிறந்த இடமாகும். அங்கே தீவினில் கடைகளே இல்லாததால் அது முற்றிலும் தனிமை நிறைந்ததாகும்.
10. அவுர் தீவு
நீங்கள் முழுமையான அமைதி மற்றும் நிம்மதியான இடம் தேடுகிறீர்கள் என்றால், அவுர் தீவு நீங்கள் செல்ல வேண்டிய இடமாகும். அது ஜோகூர் கரையிலிருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது மற்றும் நீங்கள் மெர்சிங் ஜெட்டி அல்லது சிங்கப்பூரிலிருந்து 4 மணி நேர படகு பயணம் எடுக்க வேண்டி வரும். இந்த படகு பயணம் தீவிலுள்ள மூன்று உல்லாச விடுதிகளின் மூலம் மட்டுமே ஏற்பாடு செய்ய முடியும்.
கரைக்கும் தீவிற்கும் இடையே உள்ள நீண்ட தூரத்தின் காரணமாக இங்கே தெளிந்த நீரில் ஸ்குபா டைவிங் செய்வது மிகவும் அருமையாக இருக்கும். அதன் சுற்றுச்சூழல் மன்டா ரேய்ஸ், பாராகுதாஸ், ஆமைகள் போன்ற பல்வகை கடல் உயிர்வாழ்களுக்கு வீடாக அமைந்துள்ளது. டைவ் செய்யும் காலம் ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை ஆகும். டைவ் பேக்கேஜ்ஜுகள் மெயின்லேன்டில் உள்ள டைவ் நிலையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
கூடுதல் : பாது ஃபெரிங்கி, பினாங்கு
கடந்த 1970-களில் இருந்து பினாங்கு தனது கடற்கரைகளுக்குப் பல சுற்றுப்பயணிகளை ஈர்த்து வருவதோடு 2008-ஆண்டு யூனெஸ்கோவினால் உலக பண்பாட்டு மரபுவள பட்டணமாக அறிவிக்கப்பட்டது. இந்த வரிசை அந்தஸ்த்தால், மரபுவள உறைவிடங்களையும் பாது ஃபெரிங்கியையும் சுற்றிப் பார்க்க வரும் சுற்றுப்பயணிகளின் வருகை அலைகடலென பெருகியது. பினாங்கு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான சேவையின் மூலம் சுலபமாக அடையும் தளமாகும். அதோடு தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து இரயில் சேவை வழி மற்றும் நெடுஞ்சாலை வசதிகளின் மூலமும் போக்குவரத்தை சுலபமாக்குகின்றது.
பாது ஃபெரிங்கி பினாங்கில் மிகவும் பிரபலமான கடற்கரையாகும். இக்கடற்கரை, பல தரப்பட்ட உல்லாச விடுதிகள் மற்றும் அனைத்து தரப்பு பயணிகளின் பட்ஜெட்டுக்கு உகந்த நடுத்தர தங்கும் விடுதிகளும் கொண்டுள்ளது. இக்கடற்கரை பாய் படகோட்டம், ஜெட் சருக்கு மற்றும் பனானா படகு பயணம் போன்ற பல தரப்பட்ட கடல்நீர் விளையாட்டு நடவடிக்கைகளுடன் வளர்ந்து வருகின்றது. மாலை நேரத்தில் உலா செல்லுங்கள் அல்லது சூரிய சாய்வு நாற்காலிகளில் அமர்ந்துக் கொண்டு பானம் பருகியபடி சூரிய அஸ்தமனத்தைக் கண்டு களியுங்கள்.
சூரிய அஸ்மனமாகும் பொழுது, இரவு சந்தை பாது ஃபெரிங்கி முக்கிய சாலையின் ஓரம் உயிர் பெறும். எண்ணற்ற அங்காடி கடை வரிசைகளில் உங்களின் மனதைத் திருப்திப்படுத்தும் நினைவுப் பொருட்கள், உடைகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்கப்படும். ச்சார் குய் தியோவ் மற்றும் லக்சா போன்ற அங்காடி கடைகளின் பிரபலமான உணவுகளை உண்ண மறவாதீர்கள், ஏனெனில், இவைதான் பினாங்கை உலக உணவு இடங்களில் ஒன்றாக காண்பிக்கின்றது.
30 நிமிட பேருந்து அல்லது வாடகை வண்டி பயணம் உங்களை ஜோர்ஜ் டவுனுக்குள் அழைத்துச் செல்லும். அங்கே நீங்கள் மரபுவள கட்டடங்களையும் ஜோஸ் குச்சிகள் தயாரிக்கும் பாரம்பரிய வியாபாரங்களையும் கண்டு அறியலாம்.
நீங்கள் பினாங்கை ஆண்டு முழுதும் சுற்றி பார்க்கலாம்.
குறிப்புகள்:
- http://wikitravel.org/en/Sipadan
- http://www.huffingtonpost.com/viator/malaysias-best-beaches_b_3055533.html
- http://www.malaysia-traveller.com/beaches-and-islands.html
- http://femalemag.com.my/travel/7-amazing-beaches-you-never-thought-existed/
- https://www.insightguides.com/inspire-me/blog/top-5-beaches-in-malaysia
- https://latitudes.nu/10-best-beach-destinations-in-malaysia/
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
நன்றி ரின்போச்சே. நாம் அனைவ௫ம் மலேசியா நாட்டில் பிறந்ததற்க்கு பெ௫மைக் கொள்ள வேண்டும்.மலேசியா , மேற்கில் தீபகற்பமும் கிழக்கில் போர்னீயோ தீவின் ஒரு பகுதியையும் கொண்டுள்ளது. கடல் சூழ்ந்திருக்கும் மலேசிய நாட்டில் இயற்கையாகவே உலகின் மிகச் சிறந்த கடற்கரைகள் உள்ளன. வருடம் முழுதும் வெப்ப மண்டல வானிலை கொண்டுள்ள மலேசியா, சுற்றுலா ஆசை கொண்ட பயணிகளுக்கும் சூரியன், மணல் மற்றும் கடல் ஆகியவற்றைக் கண்டுகளிக்க விரும்பும் சுற்றுப்பயணிகளுக்கும் மிகவும் பொறுத்தமான இடமாகும்