காவாய் டாயாக் – அறுவடை திருநாள் கொண்டாட்டம்
உலகம் முழுதும் வாழும் அன்பர்களே,
நான் கடந்த 20 ஆண்டுகளாக மலேசிய நாட்டில் வாழ்ந்து வருகிறேன். மலேசிய நாட்டின் பல்வேறு பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களின் மீது எனக்கு அதீத ஈடுபாடும் மரியாதையும் உள்ளது. இந்த புரிதலே, என்னை மலேசிய நாட்டினைப் பற்றி மேலும் எழுதுவதற்கு தூண்டுகோளாக அமைந்துள்ளது. பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரங்களை வளப்படுத்தும் மலேசியாவின் அம்சங்கள் குறித்து நான் மேலும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
அவற்றில் ஒன்றுதான் போர்னியோ தீவைச் சார்ந்துள்ள மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் பகுதிகளான சரவாக் மற்றும் கலிமந்தான் வாழ் டாயாக் மக்கள் விமரிசையாகக் கொண்டாடும் பாரம்பரிய அருவடை திருநாளான காவாய் டாயாக். இந்த கட்டுரையில் நீங்கள் சரவாக் மாநிலத்தின் காவாய் டாயாக் கொண்டாட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கொண்டாட்டத்தின் தோற்றம், கொண்டாடும் முறை மற்றும் பார்வையாளர்கள் எப்படி பங்கெடுத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களை நாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறோம்.
சரவாக் வாழ் டாயாக் மக்கள்
சரவாக்கில் வாழும் டாயாக் சமூகம், ஈபான் மற்றும் பிடாயூ என்ற இரண்டு பெரிய இனத்தினையும் மூருட் (Murut), கேலபிட் (Kelabit), கென்யா (Kenyah) மற்றும் கயான் (Kayan) என்ற சிறிய அளவிலான பழங்குடி இனங்களையும் உள்ளடக்கியுள்ளது. போர்னியோவிலேயே அதிகமான ஈபான் மக்கள் எண்ணிக்கை சரவாக்கில்தான் உள்ளது, அதாவது 745,400 மக்கள் அல்லது மாநில மக்கள் தொகையில் 28% (2016 நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி) ஈபான் மக்கள் ஆவர். பிடாயூ இனத்தினர், டாயாக் மண் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம், அவர்கள் காலங்காலமாக சுண்ணாம்பு மலைகளின் பக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் சரவாக் மாநிலத்தின் தெற்கு பகுதியில் வாழும் இனத்தினர் ஆவர்.
பாரம்பரியமாக ஒரு டாயாக் குடும்பம் ருமா பஞ்சாங் அல்லது நீண்ட வீட்டில் இன்னும் சில குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்வார்கள். ஒவ்வொரு நீண்ட வீட்டிற்கும் துவாய் ரூமா (Tuai Rumah) எனப்படும் ஒரு நீண்ட வீடு தலைவர் இருப்பார். ஒரு சிறிய நீண்ட வீட்டில் குறைந்தது 10-லிருந்து 30 வரையிலான குடும்ப அறைகள் இருக்கும். நடுத்தர நீண்ட வீட்டில் 31-லிருந்து 50 குடும்ப அறைகளும் பெரிய நீண்ட வீட்டில் 100 குடும்ப அறைகள் வரைக்கும் இருக்கும்.
காவாய் டாயாக்கின் வரலாறு
காவாய் டாயாக் பெருநாள் அறுவடை நாளைக் கொண்டாடும் ஒரு விழாவாகும். டாயாக் இனத்தினர், சிறப்பான அறுவடை விளைச்சலுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் வரும் ஆண்டிலும் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டியும் இந்த பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். மலேசியாவின் சுற்றுலா மற்றும் கலாச்சார துறையின் கருத்தின் படி, ” டாயாக் சமூகத்தின் ஒற்றுமை, குறிக்கோள் மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் சின்னமாக இந்த விழா அமைக்கின்றது”. காவாய் டாயாக் விழாவை மலேசியாவின் கலாச்சாரமாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மலேசிய நாட்டின் பல்வகை சமூகத்தினரையும் அவர்களின் கலாச்சாரத்தையும் மற்றும் அடையாளத்தையும் அரசாங்கம் அங்கீகரிப்பதைத் தெளிவாக உணர முடிகின்றது.
காவாய் என்றால் ஈபான் மொழியில் “விழா” என்று அர்த்தம் மற்றும் டாயாக் என்பது சரவாக் மாநிலத்தின் பழங்குடி இனத்தினரின் பெயர். ஆண்டுதோறும் மே மாதம் 31 -ஆம் அல்லது ஜூன் மாதம் 1-ஆம் திகதி காவாய் பண்டிகை அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனால், இந்த விழா பாரம்பரியமாக ஜூன் மாதம் இறுதி வரை நீடிக்கும். காவாய் பண்டிகையைக் கொண்டாடும் திட்டத்தை முதன் முதலில் 1957-ஆம் ஆண்டில் இரண்டு வானொலி அறிவிப்பாளர்களான தான் கிங்ஸ்லேய் (Tan Kingsley) மற்றும் ஓவன் லியாங் (Owen Liang) ஆகிய இருவரும் பரிந்துரைத்தார்கள். இவர்களின் இந்த பரிந்துரை டாயாக் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இருப்பினும், அந்த கால கட்டத்தில், சரவாக் இன்னும் பிரிட்டன் ஆட்சியில் இருந்தது மற்றும் டாயாக் சமூகத்தின் விழாவை மட்டும் அவர்கள் அனுமதித்தால் மற்ற சமூகத்தினரும் இதே மாதிரியான அங்கீகாரத்தைக் கேட்கக்கூடும் என்று பிரிட்டீஷ் காலனித்துவ நிர்வாகம் சற்று தயக்கம் காட்டியது. ஆதலால், காவாய் டாயாக் ஆரம்பத்தில் சரவாக்கில் அனைத்து சமூகத்தினரையும் சேர்த்து சரவாக் நாள் என்று அழைக்கப்பட்டது.
31-ஆம் திகதி ஆகஸ்ட் 1957-ல் மலேசிய தனது சுதந்திரத்தை பிரிட்டனிடம் இருந்து பெற்றது. 1962-ஆம் ஆண்டில் காவாய் டாயாக் விழா, டாயாக் மக்களின் கொண்டாட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. 25-ஆம் திகதி செப்டம்பர் 1964-ல் மலேசிய கூட்டமைப்பு அறிவிக்கப்பட்டவுடன், ஜூன் மாதம் 1-ஆம் திகதி காவாய் டாயாக் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதோடு, முதல் பொது விடுமுறை 1965 ஆண்டில் கொண்டாடப்பட்டது.
காவாய் டாயாக் கொண்டாட்டத்தில் என்ன நிகழ்வுகள் நடக்கும்?
முன்னேற்பாடு : உணவு மற்றும் பானங்கள்
காவாய் டாயாக் பெருநாளைக் கொண்டாடுவதற்கு முன்பு, நீண்ட வீடு வாசிகள் உணவுகள் மற்றும் பானங்களைத் தயாரிக்க வேண்டும். அவர்கள் துவாக் (tuak) எனப்படும் டாயாக் இனத்தினரின் பாரம்பரிய மதுபானம் தயாரிப்பதற்குத் தேவையான நெல் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். துவாக் என்பது அரிசி மதுபான வகை. இது வடிக்கப்பட்ட ஒட்டும் சோறின் கஞ்சி கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான மதுபானமாகும். கொண்டாட்டத்திற்கு ஒரு மாதம் இருக்கும் பொழுது இதனை நுரைக்க (yeast) வைப்பார்கள்.
விருந்தளிப்போர் பாரம்பரிய பலகாரங்களும் கேக்குகளும் அதாவது செபிட் பலகாரம் (மடிக்கப்பட்ட பலகாரம்), சாராங் செமூட் (எறும்பு கூடு கேக்), ச்சுவான் (அச்சு கேக்) மற்றும் பெங்கானன் இரி (தட்டு வடிவிலான கேக்) போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். பெரும்பாலான பலகாரங்கள், பெங்கானான் இரி தவிர மற்ற பலகாரங்கள் சில நாட்களுக்கு முன்பாகவே தயாரிக்கப்பட்டு ஜாடிகளில் மூடி வைக்கப்படும். பொதுவாக, நீண்ட வீட்டின் தலைவர், பெருநாளின் போது சமைப்பதற்குத் தேவையான இறைச்சிகளைப் பெற, மீன் பிடிக்கவும் வேட்டைக்குச் செல்லவும் ஏற்பாடு செய்வார்.
முன்னேற்பாடு: நீண்ட வீடு அலங்கரிப்பு
காவாய் டாயாக் கொண்டாட்டத்திற்கு முன்பு, நீண்ட வீடு வாசிகள் ஒன்றாக இணைந்து வீட்டைப் பழுது பார்த்து, வர்ணம் பூசி சுத்தப்படுத்துவார்கள். நீண்ட வீட்டிலுள்ள சுவர்களை செதுக்கப்பட்ட சுவர் ஓவியங்கள் கொண்டு அலங்கரிப்பார்கள். அதோடு பின்னப்பட்ட பாரம்பரிய ரோத்தான் பாயை விருந்தினர்கள் அமர்வதற்காக வீட்டிற்குள் விரித்து வைப்பார்கள் .
காவாய் டாயாக் திருநாளுக்கு ஒரு நாள் முன்பு என்ன நடக்கும்?
சமையல் தொடரும்
காவாய் டாயாக் திருநாளுக்கு ஒரு நாள் முன்பு, விழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் தேவையான உணவுகளையும் பொருட்களையும் உதாரணத்திற்கு பனை எண்ணை, அபிங், சாகோ, தென்னை தளிர்கள், மூங்கில் தண்டுகள், மரவள்ளிக் கிழங்கு இலைகள், கத்தரிக்காய் போன்ற இன்னும் பல பொருட்களைச் சேகரிப்பதற்காக காலையிலேயே ஒன்று கூடுவார்கள். இந்த பொருட்கள் சூப் மற்றும் மற்ற உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும். டாயாக் மக்கள் சோற்றை மூங்கில் துண்டுகளில் சமைப்பதால் மிகவும் தனித்துவமான வாசனை வரும். அரிசியை அடுப்பிலோ சோறு சமைக்கும் பாத்திரத்திலோ (குக்கர்) கூட சமைக்கலாம். தேவையான பொருட்களைச் சேகரித்த பின், அனைவரும் ஏற்கனவே பதப்படுத்தி வைக்கப்பட்டமற்றும் புதிய இறைச்சிகளைப் பல வகையான மூலிகைகள் உதாரணத்திற்கு அறுகம்புல் (செராய்), இஞ்சி, புங்காங் இலைகள் மற்றும் உப்பு ஆகியவற்றைக் கொண்டு சமைப்பார்கள். துவாக் பொதுவாக வறுக்கப்பட்ட இறைச்சி கொண்டு பரிமாறப்படும்.
பேராசையை விடுதல்
மே மாதம் 31-ஆம் திகதி, அதாவது காவாய் டாயாக் திருநாளுக்கு ஒரு நாள் முன்பு, இரண்டு ஆண்கள் அல்லது இரண்டு குழந்தைகள் ஒரு கூடையை ஆளுக்கொன்று ஏந்தியபடி தேவையற்ற பொருட்களைச் சேகரிக்க நீண்ட வீட்டைச் சுற்றி வருவார்கள். இந்த தேவையற்ற பொருட்கள் பேராசையை விடுவதைக் குறிக்கும் வண்ணம் நீண்ட வீட்டிற்குப் பின்னால் தூக்கி எறியப்படும்.
தெய்வங்களுக்கு வழங்கப்படும் படையல்
அந்தி வேளையிலே, ஒவ்வொரு குடும்ப அறையிலும், படையல் போடும் சடங்கு நடைபெறும். அதாவது சுட்டாங்கல் (பீங்கான்) தட்டுகள், பித்தளை கோப்பை (தமாக்), மூங்கில் தோல் கொள்கலன்கள் போன்றவை தெய்வங்களுக்குப் படைக்கப்படும். சாடின் பி. (Sadin B.) தன்னுடைய ராஜா டுரோங் (Raja Durong) என்ற இலக்கிய புத்தகத்தில், டாயாக் மக்கள் ஏழு விதமான தெய்வங்களை நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்:
- செங்காலாங் புரோங் – போர்க் கடவுள்
- பிகு புன்சு பேதாரா – இரண்டாம் நிலை மகா ஆசாரியர்
- மென்ஜாயா மனாங் – முதல் மதகுரு மற்றும் மருத்துவ கடவுள்
- செம்புலாங் கானா மற்றும் செமெருகா – வேளாண்மை கடவுள்
- செலாம்படை – படைப்பு மற்றும் இனப்பெருக்கும் கடவுள்
- இனி இனீ/அண்டன் – நீதி கடவுள்
- அண்ட மார – செல்வ கடவுள்
கடவுளின் ஆசிகளை வேண்டும் அதே வேளையில், டாயாக் மக்கள் தங்களுக்குக் கடந்த காலத்தில் உதவி செய்த ஆவிகளையும் வழிபடுவார்கள். தெய்வங்களுக்கான படையல்கள் குடும்ப அறையின் நான்கு மூலைகளில் அதாவது சமையலறையில், அரிசி ஜாடிக்குள், கலைக்கூடம், தஞ்சு (தாழ்வார சுவர்) மற்றும் பண்ணையில் ஆகிய இடங்களில் வைக்கப்படும். மற்ற விலைமதிப்பற்ற பொருட்களும் தெய்வங்களுக்கும் ஆவிகளுக்கும் படைக்கலாம்.
ஏழு பாரம்பரிய படையல்கள் எதுவெனில், புகையிலை நிப்பா இலைகள், பாக்கு, வெற்றிலை, ஒட்டும் சோறு, அரிசி கேக், சுங்கி (புவான் இலைகள் கொண்டு சமைக்கப்படும் ஒட்டும் சோறு), மூங்கில் துண்டுகளில் சமைக்கப்பட்ட ஒட்டும் சோறு, எறும்பு கூடு கேக், அச்சு கேக், பெங்கானன் இரி (நிப்பா மற்றும் சீனி கொண்டு சமைக்கப்பட்ட சோறு), பாப் சோறு (சட்டியில் வேக வைக்கப்பட்ட ஒட்டும் நெல்), அவித்த முட்டைகள், சிறிய மூங்கில் கொள்கலனில் அரிசி மதுபானம் ஆகியவையாகும். படையல்கள் வைக்கப்பட்ட பின், நீண்ட வீட்டின் தலைவர் விழாவைத் தலைமை தாங்கி சிறப்பான அறுவடைக்கும் விளைச்சலுக்கும் தெய்வங்களுக்கு நன்றி உரைப்பதோடு தெய்வங்களிடம் ஆசி, வழிகாட்டல் மற்றும் ஆயுளையும் வேண்டுவார். அதன்பின் தலைவர் இறந்த சேவல் ஒன்றுடன் சேவலின் ரத்தத்தில் நனைக்கப்பட்ட இறகுகளை ஓவ்வொரு படையல்களிலும் வைத்து தெய்வங்களுக்குப் படைப்பார்.
படையல் சடங்கு முடிந்ததும், அனைத்து நீண்ட வீடு குடும்பங்களும் ஒன்று கூடி கலைக்கூடத்தில் இரவு உணவு உட்கொள்வர். இதை மக்கை ராமி அல்லது பெருநாள் உணவு என்று அழைப்பர். நீண்ட வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் இந்த பெருநாள் உணவுக்குப் பங்களித்திருப்பார்கள். நள்ளிரவுக்கு முன்பு, தெய்வங்களையும் ஆவிகளையும் வரவேற்கும் ஊர்வலம் ஒன்று கலைக்கூடத்தில் நடைபெறும். சில சமயங்களில் நீண்ட வீடு வாசிகள் ஓர் அலங்கார அணிவகுப்பு ஏற்பாடு செய்து கெலிங் மற்றும் குமாங் காவாய் என்று அழைக்கப்படும் காவாயின் ராஜா மற்றும் ராணியைத் தேர்தெடுப்பார்கள். பிறகு, பெரியவர்களும் நீண்ட வீட்டின் தலைவரும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஒழுங்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரை வழங்குவார்கள். பாரம்பரியத்தையும் அடிப்படை விதிகளையும் மீறி சண்டை போடுதல், கூச்சலிடுதல், குடிபோதையில் தவறாக நடந்து கொள்ளுதல் அல்லது பொருட்களச் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
கிறிஸ்துவ மதத்தைத் தழுவிய டாயாக் சமூக உறுப்பினர்கள், தெய்வங்களுக்கான படையல் சடங்கில் கலந்து கொள்வதற்குப் பதிலாக, தேவாலயத்திற்குச் சென்று இறைவனிடம் அறுவடைக்காக தங்களின் நன்றியைச் செலுத்திய பின் மீண்டும் நீண்ட வீட்டிற்கு வந்து இரவு உணவு கொண்டாட்டத்தில் கலந்துகொள்வர்
இரவு உணவு
நள்ளிரவில் கோங் எனப்படும் மணி அடித்து வருகையாளர்களையும் நீண்ட வீடு வாசிகள் அழைப்பார்கள். தலைவர் நீண்ட ஆயுள் வேண்டி டோஸ்ட் செய்த பின்பு, நல்வாழ்த்துகள் பிரார்த்தனை சொன்னவுடன் வருகையாளர்கள் பெருநாள் வாழ்த்துக்களை அதாவது “காயு குரு, கெராய் ஞாமை, செனாங் லந்தாங் ங்குவான் மெனுவா “(Gayu Guru, Gerai Nyamai, Senang Lantang Nguan Menua) சொல்வார்கள். வருகையாளர்களில் ஒரு கவிஞர் இருந்தால், அவரை “திமாங் ஐ பெங்காயூ” (timang ai pengayu) அதாவது வற்றா நீர் வேண்டி கவிதை பாட சொல்வார்கள். கடந்த கால மோதல்கள் அல்லது தவறுகள் இந்த நேரத்தில் மன்னிக்கப்படும்.
இரவு உணவிற்கு பிறகு, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். உதாரணத்திற்கு பாரம்பரிய ங்காஜாட் (வரவேற்பு) நடனம், வாள் நடனம், தற்காப்புக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பிடாயூ டாயாக் மக்கள், தங்கள் சமூகத்தின் பாதுகாப்பு வேண்டி தோளாக் பாலா (அபாயம் நீக்கும் நடனம்) எனும் நடனம், அறுவடை முன்பான நடனம், நெல் உயிர் பெறவும் வருகையாளர்கள் வரவும் தோதோங்க் நடனம் மற்றும் அறுவடை நாளின் இறுதியில் சிறப்பான விளைச்சலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தெய்வங்களுக்கு நன்றி கூறி லங்கி ஜுலாங் நடனம் ஆகிய நடனங்களை ஆடுவர்.
இரவு உணவுக்குப் பின், விருந்தினர்கள் தங்களின் சமூக அந்தஸ்த்துப்படி வரிசையில் நிற்பர். பெண் ஒருவர் பாடிக் கொண்டே இருக்கையில் மற்ற பெண்கள் ஆண்களுக்கு கிண்ணங்களில் துவாக் பானத்தை வழங்குவார்கள். அதன்பின், பெலாண்டை, ரம்பான், பந்துன், ஜாவாங் மற்றும் சங்கை போன்ற பாரம்பரிய கவிதைகளைப் பாடுவர்.
சரவாக்கில் காவாய் டாயாக்
Or view the video on the server at:
https://video.tsemtulku.com/videos/GawaiDayak.mp4
ங்காபாங்
ஜூன் மாதத்தில் 1-ஆம் திகதி, நீண்ட வீடுகள் ங்காபாங் அதாவது வருகையாளர்களுக்குத் திறந்து வைக்கப்படும். அதோடு நீண்ட வீடு வாசிகளும், தனியார் அமைப்புகளும் அல்லது டாயாக் சமூக அமைப்புகளும் திறந்த இல்ல உபசரிப்புகளை ஏற்பாடு செய்வார்கள். வருகையாளர்களும் சுற்றுலா பயணிகளும் இந்நாளில் காவாய் டாயாக் திருநாளைக் கொண்டாட அழைக்கப்படுவர். வருகையாளர்கள் வந்ததும், வீட்டுப் பெண்கள் வருகையாளர்களுக்கு ஞிபூர் தெமுவாய் (Nyibur Temuai) பாரம்பரியப்படி பல விதமான துவாக் (tuak) உதாரணத்திற்கு ஞம்புட் பெங்காபாங் (வரவேற்பு பானம்), ஐஉஸ் (தாகம் தீர்க்கும் பானம்), ஐ பாசு (கழுவும் பானம்), ஐ உந்தோங் (லாப பானம்) மற்றும் ஐ பாசா (மரியாதை பானம்) ஆகியவை பரிமாறப்படும்.
திறந்த இல்ல உபசரிப்பின் போது, தலைவர் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்தவர், சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்த ஜகு அன்சா அல்லது கூர்மையான உரை ஒன்றை வழங்குவார். சிறப்பு விருந்தினர் வந்தவுடன், அவர் மூகா குதா எனப்படும் சடங்கினை அதாவது மூங்கில் வேலி ஒன்றை வாள் கொண்டு வெட்டிய பின் கவிதை ஒன்றையும் வாசித்து பூர்த்தி செய்வார். அதன்பின், ஒரு ஏணிப்படியின் கீழ் மிருகமொன்று குத்தப்படும். நிகழ்வின் போது, ங்கஜாட் நடன கலைஞர்களும் இசைக்கலைஞர்களும் வருகையாளர்களை அவர்களின் இருக்கைக்கு வழிநடத்திச் செல்வார்கள். அனைவரும் அமர்ந்த பின், தலைவர் அல்லது கவிஞர்கள் வருகையாளர்களுக்காக தங்களின் தலைக்கு மேலே ஒரு கோழியை ஆட்டிக் கொண்டே பிரார்த்தனைகளை வாசிப்பார்கள்.
விருந்தினர்களுக்கு உணவு வழங்கப்படுவதற்கு முன்பு, உணவை மூடி வைத்திருக்கும் நெய்யப்பட்ட பாரம்பரிய துணியைத் திறப்பதற்கு மூகா குஜோக் எனப்படும் சிறப்புரை வழங்கப்படும். பந்தில் அல்லது வற்புறுத்தி அருந்த வைக்கும் நடவடிக்கையின் போது, ஆண்களின் கூச்சத்தைப் போக்க பெண்கள் பாரம்பரிய பந்தோன் (கவிதை) பாடிக் கொண்டு துவாக் பானத்தை ஆண்களுக்குப் பரிமாறுவார்கள். அவர்களின் கலாச்சாரப்படி , நிகழ்ச்சி நடத்துபவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்கள், தங்களுக்கு வழங்கப்படும் முதல் பானத்தை ஏற்க மறுப்பார்கள்.
காவாய் டாயாக் விழாவில் குறி சொல்லும் அங்கமும் இருக்கும். உட்டி (uti) எனப்படும் நடவடிக்கையின் போதும், ஒரு சிறப்பு விருந்தினரை பீங்கான் தட்டில் வைக்கப்பட்ட தேங்காயை மழுங்கிய கத்தியைக் கொண்டு தட்டை உடைக்காமலும் தேங்காயைப் பிடிக்காமலும் உடைக்கச் சொல்வார்கள். தேங்காயினுள் வெள்ளையாக இருந்தால் நல்ல குறி என்றும் கறுப்பு நிறத்தில் இருந்தால் அபசகுனம் என்றும் டாயாக் மக்கள் நம்புகின்றார்கள். காவாய் டாயாக் திருநாள் ஜூன் மாதம் 1-ஆம் திகதி கொண்டாடப்பட்டாலும், இவ்விழா சில நாட்கள் முதற்கொண்டு ஒரு மாதம் வரையிலும் நீடிக்கும். அந்த மாதத்தில் நிறைய டாயாக் திருமணங்களும் நடைபெறும். கொண்டாட்டத்தின் நிறைவைப் பறைசாற்ற, ங்கிலிங் பிடாய் (Ngiling Bidai) அல்லது காவாய் டாயாக் தொடக்கத்தில் விரித்துப் போடப்பட்ட பின்னப்பட்ட ரோத்தான் பாய்களைச் சுருட்டும் பாரம்பரியம் கடைபிடிக்கப்படுகின்றது.
உடைகள் அணியும் முறை
காவாய் டாயாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்பவர்கள், டாயாக் பாரம்பரிய உடையான ங்கெப்பன் (பாரம்பரிய உடை), அல்லது சாதாரண நவீன உடைகளும் அணியலாம். பொதுவாக, தலைவர், அரைத்துணி, மிருகத்தோலில் செய்யப்பட்ட மேல்சட்டை அணிவதோடு தலையில் மயிலறகைச் செருகி இருப்பார். பொதுவாக ஆண்கள் தங்களின் அனுபவத்தைத் தெரிவிக்கும் விதமாக பச்சை குத்தி கொள்வார்கள். உதாரணத்திற்கு, கழுத்தின் முன் பகுதியில் தவளைச் சின்னத்தை அல்லது கைக்குப் பின்னால் தெகுலுன் சின்னத்தைக் குத்தி இருந்தால் அவர்கள் போரில் இன்னொருவரைக் கொன்றிருக்கின்றார்கள் என்று அர்த்தம். பச்சை குத்தும் சின்னங்கள் கடல் வாழ்க்கை சார்ந்ததாக இருந்தால் நீர் கூறுகளிடமிருந்து பெறும் பாதுகாப்பைக் குறிப்பிடுகின்றது.
பெண்களுக்கான பாரம்பரிய டாயாக் உடையான காயின் பெதாதிங், கையால் பின்னப்பட்ட ஒரு வகையான துணி இடுப்பிலும், ரோத்தானில் பின்னப்பட்ட இறுக்கமான மேலாடையையும் உள்ளடக்கியதாகும். பெண்கள் செலம்பை அல்லது துப்பாட்டா போன்ற துணியைத் தோள்களிலும் அல்லது நெய்த மணி சங்கிலியையும் அணியலாம். இவர்களின் கூந்தல் பொதுவாக தூக்கி கொண்டை போடப்பட்டிருக்கும் மற்றும் இவர்கள் லம்பிட் (வெள்ளி வார்), தோள் அணிகலன், கொலுசு மற்றும் பண முடிப்பு ஆகியவற்றையும் அணிந்திருப்பர். நீங்கள் இங்கே வருகை புரிய விருப்பப்பட்டால், மலேசியா வெப்ப மண்டல நாடு என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள். ஆதலால், இங்கே பெரும்பாலான மக்கள் மெல்லிசான மற்றும் குளிர்ச்சி கொடுக்கும் துணிகளால் ஆன உடைகளையே அணிவார்கள். ஆகையால், மலேசியாவிற்கு வருகை தரும்பொழுது, மெல்லிசான சட்டைகள், அரை காற்சட்டைகள், முட்டி வரையிலான பாவாடைகள், உடைகள், முழு காற்சட்டைகள், குளுமைக் கண்ணாடிகள், தொப்பி, குளிருடை மற்றும் குறைந்தது ஒரு ஸ்கார்ஃப் அல்லது துப்பட்டா போன்றவற்றை கொண்டு வரும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். அதோடு, தட்டையான மற்றும் வசதியான காலணிகளையும் கொண்டு வருவது நல்லது.
மலேசியா மற்றும் சரவாக் மாநிலத்தைச் சுற்றிப் பார்த்தல்
மலேசியாவிற்குள் நுழைய தேவையான பயணப் பத்திரங்கள்
மலேசியாவிற்கு வருகை புரிய விரும்பும் சுற்றுப்பயணிகளின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) குறைந்த பட்சம் 6 மாதம் வரையிலான கால வரைமுறையில் (செல்லுபடியாக) இருத்தல் அவசியம். ஆசியான் நாடுகளின் பிரஜைகள் (புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) மலேசியாவில் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கலாம். மற்ற நாடுகளிலிருந்து வரும் சுற்றுப்பயணிகள், விசாவிற்கு முன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம் அல்லது மலேசியா வந்தடைந்ததும் கிடைக்கும் விசாவை (Visa On Arrival) மலேசிய ரிங்கிட் 330 (அமெரிக்கன் டோலர் 75) விலையில் விண்ணப்பம் செய்யலாம். தற்பொழுது, சீனா, இந்தியா, வங்காளாதேசம் மற்றும் நேபால் நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் இ-விசாவிற்கு விண்ணப்பம் செய்யும் தகுதியைப் பெற்றிருக்கின்றார்கள்.
தங்கும் வசதிகள்
நீங்கள் அவர்களின் கொண்டாட்டத்தின் போது, டாயாக் மக்களுடனே தங்கி அவர்களின் கலாச்சாரங்களை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் கீழ்கண்ட நீண்ட வீடுகளின் தங்கும் சேவையைப் பயன்படுத்தலாம்:
அன்னா ராயிஸ் பிடாயூ நீண்ட வீடு
அவர்களின் வலைத்தளத்தின்படி, அன்னா ராயிஸ் பிடாயூ நீண்ட வீடு 175 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாறு கொண்டுள்ளதோடு 500 வருடங்களுக்கு மேலான எழுதப்படா சரித்தமும் கொண்டுள்ளது. அன்னா ராயிஸ் பிடாயூ நீண்ட வீடு, இயற்கை நீருற்று ஒன்றின் அருகில் அமைந்திருப்பது மற்றுமொரு முக்கிய ஈர்ப்பாகக் கருதப்படுகின்றது.
முகவரி :
Kampung Annah Rais
Padawan, 94700 Kuching
Sarawak, Malaysia
தொலைபேசி எண்: +65 9004 9762
செல்லும் வழி:
அன்னா ராயிஸ் நீண்ட வீடு பாடாவான் மாவட்டத்தில், அதாவது சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங்கிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது. அன்னா ராயிஸ் நீண்ட வீடு மிகவும் உட்பகுதியில் இருப்பதால், வருகையாளர்கள் நீண்ட வீடு ஒருங்கிணைப்பாளரின் உதவியுடன் வாடகை வண்டி சேவையை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
ரூமா ஞுகா நீண்ட வீடு
ரூமா ஞுகா நீண்ட வீடுதான் மலேசிய சுற்றுலாத்துறையின் தேசிய தங்கும் வீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சரிகேய் மாவட்டத்தின் முதல் நீண்ட வீடு ஆகும். இந்த நீண்ட வீடு, உளின் மரக்கட்டையால் 1955-ஆம் ஆண்டில் கட்டப்பட்டு இன்றும் உறுதியாக நிற்கின்றது. வருகையாளர்கள் நீண்ட நீண்ட வீடு வாசிகளுடன் சேர்ந்து அவர்களின் அன்றாட நிகழ்வுகளான ரப்பர் மரம் வெட்டுதல் அல்லது டாபாய் போகுதல் – உள்ளூர் ஆலிவ் பழங்களைச் சேகரித்தல் ஆகியவற்றில் பங்கெடுக்கலாம். அருகிலிருக்கும் நீர்வீழ்ச்சிகளிலும் வருகையாளர்கள் நீச்சல் அடிக்கலாம்.
முகவரி:
C/O Rh. Nyuka Ak. Itam, Lubuk Lemba
Ulu Sarikei
96100 Sarikei
Sarawak
தொலைபேசி எண்: +6019-4687518
அங்கே செல்லும் வழி:
ரூமா ஞுகா நீண்ட வீடு, சரிகேய் நெடுஞ்சாலையுள்ள பாயோங் முச்சந்தியிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கின்றது. நீண்ட வீடு ஒருங்கிணைப்பாளர் உதவியுடன் நீங்கள் வாடகை வண்டி ஏற்பாடு செய்து இந்த இடத்தை அடையலாம்.
மற்ற நீண்ட வீடுகள்
சரவாக் சுற்றுலா சபை, வருகையாளர்களுக்கு சிபுவில் இருக்கும் பாவாங் அசான் ஈபான், கபிட் பட்டணத்தில் இருக்கும் மற்ற நீண்ட வீடுகளையும் பரிந்துரைக்கின்றது.
நீண்ட வீட்டில் தங்கும் பொழுது செய்யும் நடவடிக்கைகள்
வெளிப்புற நடவடிக்கைகள்
பார்வையாளர்கள் பல விதமான நடவடிக்கைகளில் ஈடுபடலாம். உதாரணத்திற்கு, காடு மலை ஏறுதல், ஊதும் தூப்பாக்கியில் வேட்டையாடுதல், மூங்கில் படகு செலுத்துதல், ஆற்றங்கரையோரம் விருந்துண்ணுதல், பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாத இடைவெளியில் அறுவடை செய்தல், ரப்பர் மரம் சீவுதல் மற்றும் பழம் காய்க்கும் பருவத்தில் அதாவது நவம்பரிலிருந்து டிசம்பர் வரை டபாய் என்னும் பழம் பறிக்கும் நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடலாம்.
உட்புற நடவடிக்கைகள்
பார்வையாளர்கள் பாரம்பரிய உணவுகளான மூங்கில் சோறு சமைக்கலாம், பாரம்பரிய இசைக்கருவிகளை வாசிக்கலாம், இயற்கை பொருட்களிலிருந்து கூடைகள் பின்னலாம் அல்லது பாரம்பரிய உணவுகள் மற்றும் பானங்களான ச்செம்படாக் மற்றும் துவாக் போன்றவற்றை சுவைத்துப் பார்க்கலாம். நீண்ட வீட்டு வாசிகள் பல உட்புற விளையாட்டுகளை ஏற்பாடு செய்வார்கள். உதாரணத்திற்கு, ஊதும் துப்பாக்கி போட்டி அல்லது டாயாக் பாரம்பரிய நடன வகுப்புகள் போன்றவையாகும்.
மூலம்:
- https://en.wikipedia.org/wiki/Gawai_Dayak
- http://publicholidays.com.my/hari-gawai/
- http://goseasia.about.com/od/eventsfestiva2/a/gawai_dayak_festival_malaysia.htm
- http://blog.sarawakborneotour.com/P/105/What-Is-Gawai-Festival-All-ABout
- http://robinsonmike.blogspot.my/2013/08/hari-gawai-dayak.html
- https://en.wikipedia.org/wiki/Sarawak
- http://www.theborneopost.com/2016/05/11/many-events-lined-up-to-celebrate-harvest-festival/
- http://www.nst.com.my/news/2016/06/148983/sarawak-comes-alive-gawai
- https://en.wikipedia.org/wiki/Longhouse
- http://www.malaysia.travel/en/sa/events/2015/6/gawai-dayak-festival
- https://sarawaktourism.com
- http://www.longhouseadventure.com/accommodation/
- https://ibancustoms.wordpress.com/iban-literature/
மேலும் பல சுவாரஸ்யமான இணைப்புகளுக்கு:
- 25 Mouthwatering Dishes of Malaysia
- Thaipusam – The Festival of Lord Murugan
- A Muhibbah Celebration: The Lantern Festival Charity Bazaar
- Stronger Bond Between Malaysia and China
- Diwali Celebrations in India
- A Festival for the Most Haunted Village
- 5 Atrocities of the British Empire
- Not His Finest Hour: The Dark Side of Winston Churchill
- Britain Should Stop Trying to Pretend That Its Empire Was Benevolent
Please support us so that we can continue to bring you more Dharma:
If you are in the United States, please note that your offerings and contributions are tax deductible. ~ the tsemrinpoche.com blog team
இந்த கட்டுரையில் நீங்கள் சரவாக் மாநிலத்தின் காவாய் டாயாக் கொண்டாட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கொண்டாட்டத்தின் தோற்றம், கொண்டாடும் முறை மற்றும் பார்வையாளர்கள் எப்படி பங்கெடுத்துக் கொள்ளலாம் போன்ற தகவல்களை விளக்கியுள்ளனா்.நன்றி ரின்போச்சே அவா்களே.